அரைத்த மாவையே ஐ.நா.,அரைக்க வேண்டாம்”பாதுகாப்பு கவுன்சில் பலவீனம்அடைந்து விட்டது,” -இந்திய தூதர் காட்டம்

SHARE

” ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பலவீனம்அடைந்து விட்டது,” என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஐந்து நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பல நாடுகளின் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால், நம்பகத்தன்மையுடன் செயல்பட முடியாமல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பலவீனமடைந்து விட்டது. அதை சீர்திருத்துவது தொடர்பாக, உறுப்பு நாடுகள் இடையே நடக்கும் விவாதங்களில், தீர்வுக்கான தீவிரம் இல்லை. பல்கலையில் நடக்கும் விவாதம் போல நடக்கிறது என தனது உரையில் அவர் தெரிவித்தார்

கடந்த, 10 ஆண்டுகளில், சீர்திருத்தம் தேவை என்ற பேச்சைத் தவிர, இந்த விவாதங்களில் உருப்படியான எந்த முன்னேற்றமும் இல்லை. சிறிய, நடுத்தர நாடுகளின் நலனுக்கு பாடுபடுவதாக, வளர்ந்த நாடுகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன; ஆக்கப்பூர்வ விவாதங்களில் அவை அக்கறை காட்டுவது இல்லை. இந்த விவாதங்கள் எதுவும் அதிகாரபூர்வ ஆவணங்களாக பராமரிக்கப்படுவதில்லை. அதனால், மீண்டும் அடுத்த ஆண்டு கூட்டத்தில், அரைத்த மாவையே அரைக்கும் நிலை ஏற்படுகிறது.

எதனால் இந்த நிலை என சிந்தித்தால், விரல் விட்டு எண்ணக்கூடிய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் தான், பேச்சில் முன்னேற்றம் காண விடாமல் தடுக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்.

அவை, உறுப்பு நாடுகளின் பின்னால் இருந்து இயக்குகின்றன. அவை கூறும் நிபந்தனை களை நிறைவேற்ற முடியாது என்பது, உறுப்பு நாடுகளுக்கும் தெரியும். பலவீனமாகி விட்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மிக விரைவாக சீர்திருத்தப்பட வேண்டும். இது தொடர்பாக, ஐ.நா., 75வது ஆண்டு தீர்மானத்தின்படி, நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது என காட்டமாக இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்தார்.

பின்னர் ஐ.நா., பொதுச் சபையில், பாக்., துாதர் முனிர் அக்ரம் பேசும்போது, எல்லை கட்டுப்பாடு கோடு பற்றி குறிப்பிட்டு, பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை எதிர்க்கும் விதமாக கருத்து தெரிவித்தார். இதற்கு, இந்திய துாதர், திருமூர்த்தி, ”முக்கியமான விவாதம் நடக்கும் இந்த சபையில், பாக்., துாதரின் பொறுப்பற்ற பேச்சுக்கு பதில் அளித்து, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை,” என்றார்


SHARE

Related posts

Leave a Comment