கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் 193 உறுப்பினர் நாடுகள் இணைந்து, 2030-ல் எட்டப்பட வேண்டிய நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை நிர்ணயம் செய்தன. அதனை தொடர்ந்து ஓவ்வொரு ஆண்டும் இந்த இலக்குகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.நா. வெளியிட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த இலக்குகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 115-வது இடத்தில் இருந்த இந்தியா, 2021-ல் இரண்டு இடங்கள் கீழிறங்கி 117-வது இடத்திற்கு வந்துள்ளது. பட்டினி, உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், உள்கட்டமைப்பு, அனைவருக்குமான தொழில்மயமாக்கல் உள்ளிட்ட விஷயங்களில் பல சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளதே, இந்த இறக்கத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் நீடித்த வளர்ச்சி குறியீட்டு எண் தற்போது 100-க்கு 61.9 ஆக உள்ளது. பூட்டான், நேபாளம், இலங்கை மற்றும் வங்க தேசம் ஆகிய 4 அண்டை நாடுகள், இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. இந்திய மாநிலங்களில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் இந்த இலக்குகளை எட்டுவதில் மிகவும் பின்தங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவில் இந்தியா 172-வது இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடுகளின் அடிப்படையில் இந்த பிரிவின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.