இந்தியாவில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் வன்முறைகளை கொண்டாடும் வகையிலும் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து இயங்கும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் சமூக வலைதளமான பேஸ்புக் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பேஸ்புக் சமூக வலைதள செயல்பாடுகள் குறித்தும் அதில் பகிரப்பட்டுவரும் தகவல்கள் குறித்தும் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விபரங்கள் பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உள்விவகார அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த ஆவணங்கள் வாயிலாக சில தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. இந்தியாவில் வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான பேச்சுகள் தவறான தகவல்கள் நாட்டில் நடக்கும் வன்முறைகளை கொண்டாடும் வகையிலான பதிவுகள் உள்ளிட்டவை அதிக அளவில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு தொடர்புடைய நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி அதன் வாயிலாக தவறான தகவல்களை பதிவிட்டு மக்களை திசைத் திருப்பி தேர்தல்களை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.