நம் நாட்டில், 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில், தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழா நேற்று துவங்கியது. மூன்று நாள் நடக்க இருக்கும் இந்த விழாவின் இறுதி நாளான நாளை, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் . தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடி, ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள உபகரணங்களை, முப்படை தலைமை தளபதிகளிடம் ஒப்படைக்க உள்ளார்.
அதன்படி, எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடட்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை, விமானப்படை தலைமை தளபதியிடம் பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.மேலும், உள்நாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறியவகை விமானங்களையும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன எலக்ட்ரானிக் பாதுகாப்பு கவசத்தையும் ஒப்படைக்கப்பட உள்ளார். என அதில் கூறப்பட்டுள்ளது.