உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படவுள்ளது.வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் இந்த அறக்கட்டளை செயல்பட இருக்கிறது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் வாய்ந்த அனில் சோனி, பல அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறக்கட்டளை மூலமாக பின்தங்கிய மற்றும் நடுத்தர பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனத் தலைமை முடிவெடுத்துள்ளது.
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ள இந்த அறக்கட்டளை வரும் 2023-ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
அனில் சோனி கிளின்டன் ஹெல்த் ஆக்சிஸ் இனிஷியேடிவ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்துள்ளார். மலேரியா, டியூபர்குளோஸிஸ் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க இவர் நிதி திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பில் கேட்ஸின் தொண்டு நிறுவனமான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இவர் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.