ஐ.பி.எல் – 200வது போட்டியை விளையாடும் முதல் வீரர் தோனி

SHARE

ஐ.பி.எல். ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று களமிறங்கி இருக்கிறார். 

இதன் மூலம் ஐ.பி.எல்.லில் 200வது போட்டியை விளையாடும் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட தோனி தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார்.  அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் 3 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
ஐ.பி.எல்.லில் இதுவரை தோனி விளையாடியுள்ள 199 போட்டிகளில் 4,568 ரன்களை எடுத்துள்ளார்.  இவற்றில் 23 அரை சதங்களும் அடங்கும்.  அதிகபட்சம் 84 ரன்களை எடுத்து போட்டியில் ஆட்டமிழக்காமலும் இருந்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவை (193 ) விட அதிக போட்டிகளில் விளையாடிய பெருமையை இந்த மாத தொடக்கத்தில் தோனி பெற்றார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 197 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார்.  3வது இடத்தில் ரெய்னா உள்ளார்.  தினேஷ் கார்த்திக் 191 போட்டிகளிலும் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 186 போட்டிகளிலும் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment