ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா நிலையம்’ நினைவு இல்லமாகிறது – இன்று திறந்து வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி

SHARE

மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.
ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய ‘வேதா நிலையம்’ இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தொடர்ந்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இதுதொடர்பான பரிந்துரையை அந்தக் குழுவினர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீட்டுக்கு வர்ணம் தீட்டப்பட்டு, பொருட்கள் வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தன. அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.
‘வேதா நிலையம்’ 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ளது. அந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும். 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன.
சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கருப்பு-வெள்ளை அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். தலைமைச்செயலாளர் க.சண்முகம், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவருடைய சகோதரர் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் நினைவு இல்லத்தை திறக்க தடை கேட்டு அவசர வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, நினைவு இல்லத்தை திறக்க தடைவிதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இதனால் திட்டமிட்டபடி இன்று நினைவு இல்லம் திறக்கப்படுகிறது.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளாகத்தையும், அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.



SHARE

Related posts

Leave a Comment