அமெரிக்காவின், 46வது அதிபராக, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், இன்று பதவியேற்றார். அவருடன், துணை அதிபராக, கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். தலைநகர் வாஷிங்டனில் ‘கேப்பிடோல்’ எனப்படும் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் வளாகத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10:15 மணியளவில் நடந்த விழாவில் அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடா மேயர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அரசியலமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றார் கமலா ஹாரிஸ்.

அதிபராக பொறுப்பேற்றார் ஜோ பைடன்
தொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் முன் ஜோபைடன் பைபிள் மீது கை வைத்து உறுதிமொழிஏற்றார்.
பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா மிச்செல் ஒபாமா, பில்கிளிண்டன், ஹிலாரி கிளிண்டன், தற்போது பதவி விலகும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக விழாவையொட்டி பிரபல பாடகி லேடி காகா அமெரிக்க தேசிய கீதத்தை பாடினார், ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார். ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளபதி, படைகளை பார்வையிடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பதவியேற்ற பின்னர், அதிபரும் துணை அதிபரும் ராணுவத்தினரின் மிடுக்கான இசை முழங்க, வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பதவியேற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், ‘நேஷனல் கார்ட்’ எனப்படும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் வாஷிங்டனில் வரலாறு கானாத 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.