2025 பீகார் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் இளம் தலைவருமான கன்னையா குமாரை காங்கிரசில் இணைத்து கொள்ள உள்ளது. இதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
கன்னையா குமார் தனது பயணத்தை பகத் சிங் பூங்காவில் உள்ள பகத் சிங்கின் சிலைக்கு மாலை அணிவித்து தொடங்குவார். இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் அவர் முறையாக இணைகிறார். மாலை 3.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.
பீகார் அரசியலில் கன்னையா குமார் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கன்னையா குமாருடன், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியும்,காங்கிரசில் இணைகிறார்.
கடந்த காலங்களில் ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற பல இளம் தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிட தக்கது.
கடந்த பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

previous post