குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது, துப்பாக்கியால் சுட்டவர், நேற்று, பா.ஜ.,வில் சேர்ந்த சில மணி நேரத்தில், அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
டில்லி, ஷாஹீன் பாக் பகுதியில், இந்தாண்டு பிப்ரவரி 1ல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, கபில் குஜ்ஜார் என்பவர், திடீரென துப்பாக்கியால் வானத்தை நோக்கி, இரு முறை சுட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று, உத்தரபிரதேசம், காஜியாபாத் மஹாநகர் பா.ஜ., தலைவர் சஞ்சீவ் சர்மா முன்னிலையில், கபில் குஜ்ஜார், பா.ஜ.க,வில் இணைந்தார். இது குறித்து, சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் நெருக்கடிக்கு ஆளான, பா.ஜ., மேலிடம், கபில் குஜ்ஜாரை, கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் கட்சியில் சேர்ந்த சில மணிநேரத்தில் நீக்கப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சிலர், பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களில், கபில் குஜ்ஜாரும் ஒருவர். அவரை பற்றி தெரியாமல் கட்சியில் இணைத்து விட்டோம். விபரம் தெரிந்த பின், அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம்.என சஞ்சீவ் சர்மா கூறினார்.