நிரம்பியது கே.ஆர்.எஸ்., கபினி அணைகள்- எடியூரப்பா சிறப்பு பூஜை

SHARE

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.

இதனால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான மைசூருவில் உள்ள கபினி, மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இரு அணைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பின.

கர்நாடகத்தை பொறுத்தவரை அணைகள் நிரம்பினால், முதல்-மந்திரியாக இருப்பவர் அங்கு நேரில் சென்று வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடத்தி அணை நீரில் பாகினா சமர்ப்பணம் செய்வது வழக்கம். அதுபோல் நடப்பாண்டில் இரு அணைகளும் முதல் முறையாக நிரம்பியதை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா அங்கு சென்று சிறப்பு பூஜை நடத்தினார்

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி கிராமத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு சென்றார். கே.ஆர்.எஸ். அணையை சுற்றி பார்த்தார்.

பின்னர் அணை நிரம்பியதை தொடர்ந்து வருணபகவானுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு பூஜை நடத்தினார், நவதானியங்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூக்கள் ஆகியவற்றை ஒரு முறத்தில் போட்டு, மற்றொரு முறத்தால் மூடினார். பின்னர் அந்த முறத்தை கே.ஆர்.எஸ். அணையின் நீரில் சமர்ப்பணம் செய்தார்.

பின்னர் செய்தியாளக்ளிடம் பேசிய எடியூரப்பா,வருணபகவான் கருணையால் இந்த ஆண்டும் மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள் நிரம்பியுள்ளன. நான் முதல்-மந்திரியாக இருந்த போது 5 தடவை கே.ஆர்.எஸ். அணை நிரம்பியுள்ளது. இதனால் 5 முறை இந்த அணையில் பூஜை செய்துள்ளேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம், பாக்கியம். தற்போது போல் ஆண்டுதோறும் அனைத்து அணைகளும் நிரம்ப வேண்டும் என்று கடவுகளை பிரார்த்திக்கிறேன். விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி அணையில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.


SHARE

Related posts

Leave a Comment