எதிர்க்கட்சி தலைவர் மு,க,ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்காவை, சட்டசபைக்குள் எடுத்து சென்றதாக, ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், 21 பேரிடம் விளக்கம் கோரி, சட்டசபை உரிமைக்குழு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. நோட்டீசை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் உள்ளிட்ட, 21 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ‘உரிமைக்குழு அனுப்பிய, நோட்டீசில் அடிப்படை தவறுகள் இருப்பதால், நடவடிக்கை எடுக்க முடியாது’ என, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து, செப்., 7ம் தேதி உரிமைக்குழு கூடியதன் அடிப்படையில், அன்றே சட்டசபை செயலர் மீண்டும், நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதை எதிர்த்து,உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி புஷ்பா. சத்தியநாராயணா முன், நேற்று விசாரணைக்கு வந்தன. எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ, ஆஜராகினர்.’ஏற்கனவே, தலைமை நீதிபதி அமர்வில், உரிமை மீறல் இல்லை என தெளிவுபடுத்தி விட்ட பின்னர். இந்த உத்தரவை, உரிமைக்குழு பரிசீலித்திருக்க வேண்டும். அதே காரணத்துக்காக மீண்டும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என அவர்கள் வாதிட்டனர்.
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் எடுத்து வைத்த வாதத்தில்:எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக தான், உரிமைக்குழு தலைவர் வழக்கு தொடுத்துள்ளார். அவரை தவிர்த்து, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். குழுவின் முன் ஆட்சேபனையை தெரிவிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது;இருநுதமு மனுதாரர்கள் ஆஜராகவில்லை. உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய அடிப்படை தவறு நீக்கப்பட்டு, புதிதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு பதில் அளிக்க, 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், இன்று காலை, நீதிமன்றம் வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணா, மறுஉத்தரவு வரும் வரை, 2வதாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில், சபாநாயகர், பேரவை செயலர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்துள்ளார்.