மலேசியா பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றார்

SHARE

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் மன்னரின் முன்னிலையில் இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரதமராக பதவி வகித்து வந்த முகைதின் யாசின், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் முகைதின் யாசின் தலைமையிலான அரசில் துணை பிரதமராக இருந்து வந்த இஸ்மாயில் சப்ரி யாகூப், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, 61 வயதான இஸ்மாயில் சப்ரியை பிரதமராக நியமித்தார்.
இந்த நிலையில் நேற்று தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அரண்மனையில் மன்னரின் முன்னிலையில் இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இஸ்மாயில் சப்ரி முகைதின் யாசின் தலைமையிலான அரசில் ராணுவ மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பதும், அவர் ஐக்கிய மலாய் தேசிய கட்சியின் துணை தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1957-ம் ஆண்டு மலேசியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்டு வந்த ஐக்கிய மலாய் தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவர், மீண்டும் பிரதமராகி உள்ளார்.


SHARE

Related posts

Leave a Comment