பணத்தை வைத்து மிகவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்கிரஸ் கட்சியையே வாங்கியதாக நினைக்க வேண்டாம் என பாஜ.,வை மே.வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் சமீபத்தில் திரிணமுல் காங்கிரஸ், கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.,க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போல்பூரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது பேசிய மம்தா, வெளியில் இருந்து வந்தவர்கள் வெறுப்பு அரசியலையும், போலியான அரசியலையும் கொண்டு வந்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தின் முதுகெலும்பைச் சிதைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், ரவிந்திரநாத் தாகூர் மண்ணில் அதுபோன்று ஏதும் நடக்காது.
பணத்தை வைத்து எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால் அதுவும் அழுகிய எம்.எல்.ஏ.,க்களை வாங்குவதால், திரிணமுல் காங்., கட்சியையே வாங்கியதாக நினைக்கிறீர்களா?. பா.ஜ.க. முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம். காந்தி போன்ற மதிப்புமிக்க பல்வேறு தலைவர்கள் மீது மதிப்பு இல்லாதவர்கள்தான் வங்கத்தைத் தங்கமாக மாற்றுவோம் எனப் பேசுகிறார்கள். ஆனால், மே.வங்கம் ஏற்கெனவே தங்கமாகத்தான் இருக்கிறது. இதை ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதையிலேயே குறிப்பிட்டுள்ளார்.