பெட்ரோல் டீசல் : மத்திய அரசிடம் லாபத்தில் பங்கு கேட்கும் மம்தா.

SHARE

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ.4 லட்சம் கோடி நிதியை மாநிலங்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக லிட்டர் நூறு ரூபாயை கடந்து விற்பனையானது. இதனால் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தீபாவளிக்கு முந்தைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு 5 ரூபாயும், 10 ரூபாயும் குறைத்தன. தொடர்ந்து பா.ஜ.க., ஆளும் மாநிலங்கள் உட்பட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைத்தது. தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.

இது தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வரியை குறைக்காவிட்டால் அடுத்த வாரம் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என பா.ஜ.க., எச்சரித்துள்ளது. போராட்டம் மூலம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு மம்தாவை செவிசாய்க்க வைப்போம் என அக்கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் கூறினார்.

இதற்கு சட்டப்பேரவை கூட்டத்தில் பதிலளித்த மம்தா சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றை அதிக விலைக்கு விற்றதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சம் கோடி வரி வருவாய் வசூலியாகியுள்ளது.

இப்போது, மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று பா.ஜ.க.,வினர் விரும்புகின்றனர். மாநிலங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும். 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பா.ஜ.க., அரசு குறைத்துள்ளது. தேர்தல் முடிந்ததும் விலை உயரும்.

எண்ணெய் விலை பற்றி எங்களுக்கு பாடம் நடத்துபவர்கள், மாநில அரசுக்கு முதலில் எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று பதிலளிக்க வேண்டும். மத்திய அரசு எங்களுக்கு உரிய நிதியை வழங்கவில்லை. மத்திய அரசு வசூலித்த ரூ.4 லட்சம் கோடி வரி வருவாயை அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment