2022ல் நடைபெறவுள்ள உ.பி., மற்றும் உத்தர்காண்ட் சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
உ.பி.,மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் களம் காண தயாராகி வருகின்றன. பஞ்சாப் மாநிலத்தில், அங்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. இதனையடுத்து, உ.பி.,மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைப்பார் என தகவல்கள் வெளியாகியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி உ.பி., சட்டசபை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்ற செய்திகள் வந்து கொண்டு உள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறு. ஆதாரமற்றது. இந்த செய்தியை பகுஜன் சமாஜ் கட்சி மறுக்கிறது. பஞ்சாபை தவிர, உ.பி.,உத்தர்கண்டில் கூட்டணி அமைத்து போட்டியிட மாட்டோம். அங்கு தனித்து போட்டியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.