மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கமாக இல்லையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் நடந்த ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், மனு அளித்த பொழுது மக்களின் கோரிக்கைகளை கேட்ட பின் பொது மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்
தேர்தலுக்காக , அரசியலுக்காக மட்டும் வருபவன் நானில்லை. எப்போதும் உங்களுடன் இருப்பவன் நான். அதிமுக அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் 100 நாளில் தீர்க்கப்படவே மனுக்கள் வாங்கப்படுகின்றது. ஆட்சி அமைத்த பின் மனுக்களை விசாரிக்க தனித்துறை அமைக்கப்படும். அதிமுக செய்ய தவறிய கடமையை திமுக அரசு மக்களுக்கு செய்து கொடுக்கும். ஒரு கோடி குடும்பங்கள் இதனால் பலன் அடைவார்கள்.
இப்போது நடப்பது அரசு அல்ல. ஊழல்வாதிகள் இணைந்து ஊழல் கோட்டையை ஏற்படுத்தியுள்ளனர். இதில் முக்கியமானவர் வேலுமணி. சுண்ணாம்பு பவுடர், பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தவர் வேலுமணி. ஊராட்சிக்கு ஒரு கோடி வீதம் 12500 ஊராட்சிகளுக்கு 12500 கோடி ஊழல் செய்துள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் கூட நுழைய முடியாதபடி வேலுமணி. தனக்கு வேண்டியவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கிறார். வேலுமணியின் சகோதரர் அன்பரசன்தான் கோவையில் அமைச்சர் போல செயல்படுகிறார். வேலுமணிக்கு வேண்டப்பட்ட நிறுவனத்தின் வருவாய் முதலில் 17 கோடியாக இருந்தது. இப்போது அந்த நிறுவனத்தின் வருவாய் 3000 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஊழல்களை கண்டுபிடிக்கின்ற பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிமுக அராஜகம் முடிகின்ற நாள் நெருங்கி கொண்டு இருக்கின்றது. மக்கள் சொத்தை கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது அசிங்கமாக இல்லையா.
ஆட்சி மாறும் அன்று காட்சியும் மாறும். வேலுமணி அராஜகத்திற்கு முடிவு கட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதை ஆழ தோண்டி புதைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.