வறட்சி இல்லாத வருங்காலம்-இந்த ஆண்டு மழையால் அடுத்த ஆண்டு நிம்மதி

SHARE


2021-ம் ஆண்டு கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வறட்சி இல்லாத கோடைகாலமாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.

தற்போதைய நிலையில் கண்டலேறு அணையில் போதிய அளவு நீர் இருப்பதால் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவ மழையும் தொடங்கி உள்ளது. முதல் நாளே மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திறக்கப்பட்ட 416.16 கன அடி தண்ணீர் என பூண்டி ஏரிக்கு 884 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 116 கன அடியும், புழல் ஏரிக்கு 971 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 460 கன அடியும் வந்து கொண்டிருக்கிறது.


குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 824 கன அடி, புழல் ஏரியில் இருந்து 115 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இன்னும் சில நாட்களில் ஏரி முழுகொள்ளளவை எட்டிவிடும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் உபரிநீரை திறக்க அனைத்து மதகுகளையும் பராமரித்து தயார் நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 2 ஆயிரத்து 325 மில்லியன் கனஅடி (2.3 டி.எம்.சி.) இருப்பு இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை தவிர்த்து புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை ஏரியிலும் மழை நீரை சேமிக்கும் பணியும் தொடங்கி உள்ளது.
சென்னை மாநகருக்கு மாதம் சராசரியாக 1 டி.எம்.சி. தேவைப்படுவதால் தற்போதைய இருப்பு மூலம் அடுத்த 6 மாதத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இனிவரும் நாட்களிலும் மழை பெய்து அதன் மூலம் மேலும் தண்ணீர் வந்து ஏரிகளில் சேமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் 2021-ம் ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வறட்சி இல்லாத கோடை காலமாக இருக்கும்.
மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment