கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரியின் இலக்கை அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை, வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கிழக்கு ஆசிய நாடான வட கொரியா இரண்டு ஆண்டுகளாக 1,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து வந்தது.
இந்த ஏவுகணையின் சோதனை வட கொரிய ராணுவ தலைமை தளபதி பாக் ஜாங் சோன் முன்னிலையில் நடந்தது. ஒரு டிரக்கில் இருந்து பாய்ந்த ஏவுகணை, வானில் 126 நிமிடங்கள் நீள் வட்டமாக பல முறை சுற்றி வந்து, இலக்கை வீழ்த்தி, கடலில் விழுந்தது.
இதையடுத்து ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக கூறி, அதன் புகைப்படங்களை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமாக இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வட கொரிய அதிபர் கிம் ஜங் உன், ஏவுகணை சோதனையை நேரில் காணவரவில்லை.
இதற்கிடையே வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை குறித்து, அண்டை நாடான தென் கொரியா மற்றும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் துாதர்கள் டோக்கியோவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது போன்ற ஏவுகனைகள் அமெரிக்கா ரஷ்யா,சீனா.இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இருப்பது குறிப்பிடத்ததக்கது‘