பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SHARE

வீடியோக்களை தணிக்கை செய்து வெளியிடக் கோரிய வழக்கில் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


திருநெல்வேலியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சென்னையில் பெண்களிடம் தவறான முறையில் கேள்விகள் கேட்டு யூ-டியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது யூ-டியூப் சேனல் போலீசாரால் முடக்கப்பட்டு விட்டது.

இருப்பினும் அவர்களது வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நடந்த சர்வே ஒன்றில் இணையதளம் மூலம் மிரட்டுவதில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருவதால், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் தவறான கருத்துக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை இணையதளம் மூலம் குழந்தைகளிடம் சென்று சேரக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. 
எனவே யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நெறிமுறைப்படுத்தவும், தணிக்கை செய்யவும் ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார்கள் ஏதேனும் வந்தால் தான் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். 
மத்திய அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து யூ-டியூப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் பதிலளிக்க உத்தரவிட்டதோடு இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 


SHARE

Related posts

Leave a Comment