தமிழகத்தின் ஒசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் ஓலா மின்சார ஸ்கூட்டரை அதன் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் சுதந்திர தினமான இன்று அறிமுகப்படுத்தினார். ரூ.99,999 மற்றும் ரூ.1,29,999 ஆகிய விலைகளில் 2 மாடல்களில் இது அக்டோபர் முதல் விற்பனைக்கு வர உள்ளது.
வாடகை ஆட்டோ மற்றும் டாக்சி சேவை வழங்கி வந்த ஓலா நிறுவனம் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் கடந்த 2020-ல் இறங்கியது. அதற்காக தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சுமார் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அங்கு உலகின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கும் பணியை பிப்., மாதம் தொடங்கியது. கடந்த 6 மாதங்களில் தொழிற்சாலையின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்தது. முதல் மின்சார ஸ்கூட்டரை அந்த ஆலையில் தயாரித்துள்ளனர். அதனை ஓலா சி.இ.ஓ., பவிஷ் அகர்வால் அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ரூ.500 செலுத்தி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 181 கி.மீ., வரை செல்லும், 0 – 40 கிலோ மீட்டர் வேகத்தை 3 நொடிகளில் அடையும் என அதன் சி.இ.ஓ., தெரிவித்தார். அதிகபட்சம் 115 கி.மீ., வேகம் செல்லுமாம். 8.5 கிலோவாட் திறன் கொண்ட மோட்டாரும், 3.9 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரியும் இதிலுண்டு. இவ்வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய வீட்டில் என்றால் 6 மணி நேரமும், ஓலாவின் ஹைப்பர் சார்ஜர் நிலையங்களில் என்றால் சுமார் 40 நிமிடங்களும் ஆகும் என கூறியுள்ளனர். 400 நகரங்களில் ஒரு லட்சம் ஹைப்பர் சார்ஜர் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மின்சார வாகனங்களுக்கு குஜராத் மாநிலம் அதிகபட்ச மானியம் வழங்குவதால் அங்கு இவ்வாகனம் ரூ.20,000 குறைவாக ரூ.79,999 என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும்.
அதற்கு அடுத்தப்படியாக காற்று மாசினால் திண்டாடும் டில்லியும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கிறது. அங்கு ரூ.85,099-க்கும், ராஜஸ்தானில் ரூ.89,968-க்கும், மஹாராஷ்டிராவில் ரூ.94,999-க்கும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தயாரானாலும் இங்கு பிரத்யேக மானியம் இல்லாததால் ஒரு லட்சம் தந்தே வாங்க வேண்டியிருக்கும்.