6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் இன்று அதிகாலை முதல் ஓட தொடங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் பஸ்-ரெயில் உள்பட பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.
கொரோனா வீரியம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை வழக்கம் போலவே தொடங்கப்பட்டது. அதேவேளை ஓரளவு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வர முடிகிறது. அரசு பஸ்கள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பஸ்கள் மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தன. ஊரடங்கு காலகட்டத்துக்குட்பட்ட சாலைவரியை ரத்து செய்தால்தான் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சாலைவரி ரத்து செய்வது குறித்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் சாதகமாக கிடைத்த தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஆம்னி பஸ்கள் இயக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி முதலே ஆம்னி பஸ்கள் இயங்க தொடங்கின. கொரோனா காரணமாக 6 மாதங்களாக ஓடாமல் இருந்த ஆம்னி பஸ்கள் புறப்பட தொடங்கியதால் பஸ் உரிமையாளர்களும், தொழிலாளர்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் ஆம்னி பஸ்களை டிரைவர்கள் இயக்கினர்.
சுமார் 500 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பயணிகளின் வருகையை பொறுத்து சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 60% இருக்கைகள் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 6 மாதத்துக்கு பிறகு ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.