ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், தமிழக ரேஷன் கடைகளில், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது.
மிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம் 2020 அக்டோபரில் செயல்படுத்தப்பட்டது. பிற மாநில கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. பீஹார், ஜார்க்கண்ட், உ.பி., – ம.பி., உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் கட்டுமானம், ஓட்டல் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர்.
இருப்பினும், ஒரே ரேஷன் திட்டம் குறித்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் பொருட்கள் வாங்கவில்லை. மத்திய உணவு துறை அதிகாரிகள், தமிழகத்தில் ஒரே ரேஷன் திட்டம் திருப்திகரமாக இல்லை என, சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்ததுடன், அத்திட்டம் குறித்து பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தமிழக உணவு துறை அதிகாரிகளை அறிவுறுத்தினர்.
மேலும், வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே பொருட்களை வழங்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து, நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, பிற மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் குறைவான கார்டுதாரர்களே பொருட்களை வாங்கிய நிலையில், செப்., 100; அக்., 585 கார்டுதாரர்கள் வாங்கி உள்ளனர். இம்மாதத்தில் இது வரை 434 கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.