ஒரே தொகுதி,50 ஆண்டுகள் எம்.எல்.ஏ,- உம்மன் சாண்டி “தி கிரேட்”

SHARE

கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து 1970 ல் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட உம்மன் சாண்டி பின்னர் தோல்வியை சந்தித்ததே இல்லை.கட்சித்தலைவர்கள் இந்திராகாந்தியும் ராகுலும் தேர்தல் அரசியலில் தோற்று போன போதும் காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காதவர் இவர் ஒருவர் மட்டுமே.

கடந்த 50 ஆண்டுகளில், நான்கு முறை மாநில அமைச்சராக 2006 – 2011ல் ஒரு முறை எதிர்க்கட்சித்தலைவராக 2004-2006 மற்றும் 2011-2016ல் இரண்டு முறை முதல்வராக பணியாற்றியுள்ளார் சாண்டி.

ஓ.சி. என கேரள மக்களாலும், குஞ்சுஞ்சு என செல்லப் பெயரிட்டு அவரது சொந்த தொகுதி மக்களாலும் அன்பாக அழைக்கப்படுகிறார் உம்மன் சாண்டி /

முதல்வராக இருந்த போது அவர் செல்லும் இடத்திற்கு வாகன அணிவகுப்பு எல்லாம் இருக்காது. ஒரே ஒரு கார். அது எல்லா ‘டிராபிக் சிக்னல்களில்’ நின்று செல்லும்.இப்போது எம்.எல்.ஏ. ஆக இருக்கும் போதும் கோட்டயத்தில் இரவில் ரயில் ஏறி சிலீப்பர் கோச்சில் படுத்துறங்கி காலையில் திருவனந்தபுரத்தில் இறங்கி தனி ஆளாய் செல்வார்.


இவரது தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் இவருக்கு தெரியாத குடும்பங்களே இல்லை. யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அங்கு சத்தமில்லாமல் வந்திருப்பார் சாண்டி.ஊரில் இருக்கும் நாட்களில் சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனைக்கு செல்லும் போது முதல்வராக இருந்த நேரத்திலும் பக்தர்கள் வரிசையில் பத்தோடு பதினொன்றாய் நின்றிருப்பார் அத்தனை எளிமை.முதல்வராக இருந்த போது 15 லட்சம் மனுக்களை பொதுமக்களிடம் நேரடியாக வாங்கி அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் என்ற பெருமை உண்டு.

கேரளாவின் அரசியல்களம் சட்டசபை வாழ்வில் பொன்விழா காணும் உம்மன் சாண்டியை மையப்படுத்தியே இன்னும் இயங்குகிறது.இதுவே கேரள மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம்.

தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி தான் இந்தியாவிலேயே அதிக காலம் சட்டசபை உறுப்பினராக இருந்தவர். அவர் 13 தேர்தல்களில் ஏழு தொகுதிகளில் இருந்து தேர்வானவர். 1984ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை.

கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் கே.எம். மாணி 54 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 13 தேர்தல்களில் ஒரே தொகுதியில் இருந்து வென்றவர்.

உம்மன் சாண்டி 11 முறை ஒரே தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வென்று 50 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கிறார். காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரே தொகுதியில் இருந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருப்பது உம்மன் சாண்டி மட்டுமே.


SHARE

Related posts

Leave a Comment