அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல்கள் இருந்து வரும் சூழலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‛எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக.,வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் வரத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு, பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்ததை எதிர்த்து 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பன்னீர்செல்வம் பதவி விலகினார்.
பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, அரசியல் சூழ்நிலைகள் மாறி, பன்னீர்செல்வம் அணியும், பழனிசாமி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டு முதல்வராக தொடர்கிறார். இந்நிலையில், தேர்தல் நெருங்கிவரும் சூழலில் முதல்வர் வேட்பாளர் குறித்த மோதல் போக்கு மீண்டும் தொடங்கியது. இரு அணிகளும் மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. துணை முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யப்போவதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் பரபரப்பு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என அவர் பதிவிட்டுள்ளார்,