கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு போட்டியாக ஜெபயாத்திரை நடத்த அழைப்பு விடுத்த கிறிஸ்துவ மத போதகர் 15 நாள் நீதிமன்ற காவலில் கோபிசெட்டிப்பாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை தடாகம் ரோடு செயின்ட் பால்ஸ் பள்ளி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி தலைவர் போதகர் டேவிட். இவரது லெட்டர் பேடில் ‘கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் போதகர்கள் மிஷனரிகள் மிஷனரி இயக்கங்களின் தலைவர்களுக்கு அன்பு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் அறிவிப்பு சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அதில் விநாயகர் சதுர்த்தி அன்று கிறிஸ்துவர்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊரிலும் அவரவர் வாகனங்களில் சென்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் போதகரின் விஷம அறிவிப்பு பொதுமக்கள் ஹிந்து இயக்கங்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மதபோதகர் டேவிட்டை, துடியலூர் போலீசார் இன்று காலை 5:30 மணியளவில் கைது செய்தனர். தொடர்ந்து, கோவை மாஜீஸ்தரேட் பிரபு முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். விசாரணை முடிவில், 15 நாள் நீதிமன்ற காவலில் டேவிட்டை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார், அவரை பாதுகாப்புடன் கோபிச்செட்டிப்பாளையம் கிளைச்சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.