‘வன்னியர்கள் ஒன்றுபட்டால், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்’ என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, தொண்டர் ஒருவரின் முதுகில் அமர்ந்து கூறுகிறார். அதற்கு, அந்த தொண்டர், ‘இத்தனை வருஷமாக, அதைத் தானய்யா செய்துக் கிட்டிருக்கோம். எங்களுக்கு முதுகு வலி தான் மிச்சம்’ என்கிறார். இப்படியொரு, ‘கார்ட்டூன்’ திமுக அதிகார பூர்வ நாளேடான முரசொலி பத்திரிகையில் வெளியாகி உள்ளது. இந்த கேலி சித்திரமும், பா.ம.க., தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு இடமில்லை; கூட்டணி கதவு அடைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்தும் விதமாகவே, தி.மு.க., தொடர்ந்து விமர்சித்து வருவதாக, அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில், கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என, அ.தி.மு.க., திட்டவட்டமாக மறுத்து விட்டது. எனவே, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பா.ம.க., போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதுபற்றி முடிவெடுக்க, அக்கட்சியின் பொதுக்குழு, வரும், 22ம் தேதி கூடுகிறது. எனவே, பா.ம.க., தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது