கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்- 2 மாணவி தற்கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவி முன்பு படித்த ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவி அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவி தற்கொலை குறித்த செய்தியை பல்வேறு யூடியூப் சேனல்கள் பதிவு செய்துள்ளன. அப்போது மாணவியின் பெயர், அவரது குடும்பத்தினர் அவர் வசித்த வீடு உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.