பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை, சிறைக்கு அழைத்து செல்லும் வழியில், உறவினர்களுடன் பேச, சேலம் போலீசார் அனுமதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு சலுகை அளித்த 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, பொள்ளாச்சி பாலியல் விவகாரம், தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், 9 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக, 9 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்த பின், இரு வாகனங்களில், கோவையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு நேற்று மாலை அழைத்து சென்றனர்.
வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகியோர் சென்ற வாகனம், கோவை, நீலாம்பூர் டோல்கேட் அருகில் திடீரென நிறுத்தப்பட்டது. சாலையோரத்தில், இந்த ஐந்து பேரின் உறவினர்களும் தயாராக நின்றிருந்தனர். வாகனத்தில் இருந்த கைதிகளுடன் உறவினர்கள் சிறிது நேரம் உரையாடி உள்ளனர். அதன்பின், அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. இவர்களுக்கு, சேலம் போலீசார் அளித்த இந்த சிறப்பு சலுகை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கைதிகளை பார்க்க வேண்டுமென்றால், சிறையில் முறைப்படி மனு அளித்து பார்க்கலாம். ஆனால், இதுபோன்று ரோட்டில் ஆட்கள் நடமாட்டம் குறைவான பகுதியில், வாகனத்தை நிறுத்தி, உறவினர்களை சேலம் போலீசார் பேச அனுமதித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறிய, ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ., சுப்ரமணியம், போலீசார் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ் குமார் மற்றும் கார்த்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.