நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் – கன்னட திரைதுறை அதிர்ச்சி

SHARE

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும் தற்போதைய கன்னட சூப்பர் ஸ்டாராக பார்க்கபடுபவருமான 46 வயது புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

புனித் ராஜ்குமார் காலையில் உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு சென்றதாகவும். அங்கு உடற்பயிற்சி செய்தபோது திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரின் 3வது மகனான இவர், குழந்தை பருவத்தில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார். 1975ம் ஆண்டு மார்ச் 17ம் பிறந்த இவர், தனது தந்தையின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 2002ம் ஆண்டு ‛அப்பு’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். அன்று முதல் இப்போது வரை ரசிகர்கள் இவரை செல்லமாக அப்பு என்றே அழைக்கின்றனர். தொடர்ந்து ‛‛அரசு, மிலானா, ஜாக்கி” உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து, கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவர் சின்னத்திரையில் கன்னட கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது, கன்னட அரசின் சிறந்த நடிகருக்கான விருது, பிலிம்பேர் விருது போன்ற விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் இவரது திடீர் மரணம் கன்னட திரையுலகினர், ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி ரேவாநத் என்ற மனைவியும், திரிதி, வந்திதா என்ற மகள்களும் உள்ளனர். புனித் ராஜ்குமாரின் சகோதரர்களான சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோரும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரது அதிர்ச்சி மரணத்தை கேட்டு தங்களது இரங்கலை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.


SHARE

Related posts

Leave a Comment