பஞ்சாப் நிலவரம் பாகிஸ்தானிற்கு சாதகமாகும் – கபில்சிபல் எச்சரிக்கை

SHARE

பஞ்சாபில் தற்போதைய சூழ்நிலை பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.,க்கு சாதகமாக மாறும்,” என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்து உள்ளார்.

நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த ஆக., மாதம் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதிய 23 பேர்களின் சார்பாக நான் பேசுகிறேன். கட்சி தலைவர், காங்கிரஸ் செயற்குழு, மத்திய தேர்தல் குழுவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களின் கருத்துகளை தலைமை கேட்க வேண்டும். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல.

நாம் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தலைவருக்கு எனது சக மூத்த நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதலாம் அல்லது எழுதியிருக்கலாம் என நான் எதிர்பார்க்கிறேன். காங்கிரசின் தற்போதைய நிலையை பார்க்க முடியவில்லை.

நமது கட்சியில் தலைவர் என யாரும் இல்லை. இதனால், யார் முடிவு எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எல்லையில் உள்ள மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ.,க்கு சாதகமாக மாறும். பஞ்சாபின் வரலாறு குறித்தும் பிரிவினைவாதிகளின் எழுச்சி குறித்தும் நமக்கு தெரியும். அனைவரும் ஒற்றுமையாக உள்ளதை காங்கிரஸ் உறுதி செய்ய வேண்டும். பஞ்சாப் மாநில தலைவரை டில்லியில் இருந்து நியமிக்கக்கூடாது. அம்மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேச வேண்டும்.


தலைமை பதவி குறித்து கடிதம் எழுதிய 23 பேரும் வேறு எங்கும் செல்ல விரும்புபவர்கள் அல்ல. நாங்கள் உறுதியாக உள்ளோம். கட்சி தலைமைக்கு நெருக்கமானவர்கள் தான் வேறு கட்சிக்கு சென்றுள்ளனர். நெருக்கமானவர்கள் அல்ல என தலைமை கருதியவர்கள் தான் தொடர்ந்து கட்சியில் உள்ளனர்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியும் கட்சியை பலப்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும். பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களை காங்கிரஸ் இழந்து வருகிறது. அவர்கள் வேறு கட்சிக்குச் செல்கின்றனர். காங்கிரசால் மட்டுமே நமது குடியரசை காப்பாற்ற முடியும். எனவே, கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.


SHARE

Related posts

Leave a Comment