காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களும் குப்பை தொட்டியில் வீசப்படும் – ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சமீபத்தில் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் கடந்த செப்.,25ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பஞ்சாப்பில் வேளாண் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேரணியை நடத்துகிறது. இதில் அந்த மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மாநிலத் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோர் பாத்னி கலன் முதல் ஜட்புரா வரை டிராக்டர் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி ,உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த மூன்று கறுப்புச் சட்டங்களையும் அகற்றிவிட்டு அவற்றை குப்பை கூடையில் வீசி எறிவோம் என்றார்.