காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார், அங்குள்ள மக்களிடம் வெகு இயல்பாக பழகிய விதம் பலரை கவர்ந்துள்ளது.
பிரச்சாரத்தின் போது டீக்கடையில் கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தியது, நெசவாளர்களை சந்தித்து பேசி அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டது, சிறுமியுடன் தேர்தல் வாகனத்தில் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது என பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.
அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி, ‘வில்லேஜ் குக்கிங்’ என்ற யூ-டியூப் சேனலில் கிராம மக்கள் இணைந்து நடத்தும் சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாடினார்.
அது மட்டுமல்லாது அவர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி சமைத்த அவர், அதனை அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்.
இந்த வீடியோ தற்போது யூ-டியூப்பில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி கிராம மக்களை சந்தித்து அவர்களுடன் சமையல் செய்து அதனை ருசி பார்க்கிறார். மேலும், ‘நல்லா இருக்கு’ என்று தமிழில் தனது அபிப்ராயத்தையும் தெரிவிக்கிறார். அவருடன் இணைந்து சென்ற ஜோதிமணி எம்.பி. மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு ராகுல் காந்தியுடன் கிராம மக்கள் பேசுவதற்கு உதவி செய்தார்.
மேலும் அடுத்த முறை வரும்போது தனக்கு ஈசல் பிரியாணி செய்து தர வேண்டும் என்று அவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
ராகுல் காந்தி தங்களுடன் இணைந்து சமையல் செய்து சாப்பிட்டது மறக்க முடியாத அனுபவம் என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.