எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? சென்னை வானிலை ஆய்வு மையம்

SHARE

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில்,  டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்த முழு தகவல்கள் இது …
தென்கிழக்கு வங்கக் கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில்‌ காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 11ஆம்‌ தேதி காலை தமிழகக் கரையைக் நெருங்கக் கூடும்‌.
இதன் காரணமாக இன்று  டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ அதி கன மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை கடலூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்‌ கன முதல் மிக கனமழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்‌சி, விழுப்புரம்‌, விருதுநகர்‌ மற்றும்‌ புதுச்சேரி ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌” என்று தெரிவித்துள்ளார்.
 மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “நாளை மறுதினம் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், நீலகிரி, கோவை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
13-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள்குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர் என்றார்.
வடகிழக்கு பருவமழை காலமான கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் இன்று வரையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 24 செ.மீ. ஆகும். ஆனால் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பை விட 46 சதவீதம் அதிகரித்து, 36 செ.மீ. என்ற அளவில் பதிவாகி இருக்கிறது. இதில் கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் இயல்பை விட மழை அதிகம் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


SHARE

Related posts

Leave a Comment