சபரிமலையில் நேற்று அதிகாலை நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இன்று முதல் ஆவணி மாத பூஜைகள் நடக்கின்றன.சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. வேறு பூஜைகள் இல்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் அபிேஷகம் மற்றும் நெய்யபிேஷகம் நடந்தது. 5:30 மணிக்கு கோயில் முகப்பு மண்டபத்தில் நெற்கதிர்களை வைத்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தினார். பின்னர் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நெற்கதிர்களை தலையில் சுமந்து வாத்ய மேளத்துடன் கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு சென்றார். அங்கு ஐயப்பன் சிலை முன் வைத்து பூஜித்த பின் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தேவசம்போர்டு தலைவர் வக்கீல் வாசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.இன்று முதல் ஆக.,23 வரை தினமும் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் படிபூஜை நடைபெறும். ஆக.,21 திருவோண சிறப்பு பூஜை நடைபெறும். ஆக.,23 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.