சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 23 உள்ளிட்ட சிலரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவுக்கு கொடுக்க பேரம் நடந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது குறித்து, என்.சி.பி.,யின் வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் கியானேஷ்வர் சிங் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு விசாரித்தது.
இதையடுத்து சமீர் வான்கடே டில்லி என்.சி.பி., தலைமையகத்தில் கடந்த 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில் இன்று ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்த சமீர் வான்கடே அதிரடியாக விடுவிக்கப்பட்டார். டில்லியின் உள்ள என்.சி.பி., தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், சமீர் வான்கடேவுக்கு பதிலாக சஞ்சய் சிங் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.