மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியானா, டில்லி மாநில எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆக.,28-ம் தேதி ஹரியானா மாநிலம் கர்ணல் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், பல விவசாயிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில்
விவசாயிகள் காஸிபூர் எல்லை, ஹரியானா எல்லையில் 2 ஆண்டுகளாக தங்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தேசத்திற்கே அவமானமாகும். இதுபோன்ற தாக்குதல்கள், தலிபான்களின் மனநிலையாக உள்ளது. இந்த அரசு எப்படி, ஏழைகளுக்கான அரசு அல்லது விவசாயிகளுக்கான அரசு என்று கூறிக்கொள்ள முடியும். விவசாயிகளின் குரலை மத்திய அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.