இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது

SHARE

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.

இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்த தகவல் இது.

சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு, பூமியை சுற்றி வரும் பாதையில், பூமி-, சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ, முழு நிலவு நாளோ ஏற்பட்டால், முறையே சூரிய, சந்திர கிரஹணம் நிகழும்.சூரியனை விட நிலவு மிகவும் சிறியது. இருப்பினும், அது பூமிக்கு அருகில் இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது. நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு போல், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு 400 மடங்கு அதிகம்.

நிலவின் விட்டத்தை விட, சூரியனின் விட்டமும் 400 மடங்கு அதிகம். எனவே தான் சூரியனும், நிலவும் வானில் ஒரே அளவு கொண்டவை போல தோன்றுகின்றன.இதன் காரணமாகவே, முழு சூரிய கிரஹணத்தின்போது சூரியனை, நிலவு முழுமையாக மறைக்கிறது. நிலவு, பூமியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது.இதனால் பூமிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு, 3 லட்சத்து, 57 ஆயிரத்து, 200 கி.மீ., முதல், 4 லட்சத்து, 7,100 கி.மீ., வரை மாறுபடுகிறது.வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது, அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறிதாக இருக்கும்.அப்போது கிரஹணம் நேர்ந்தால், சூரியனை, நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. சூரியனின் வெளி விளிம்பு, நெருப்பு வளையம் போல தெரியும். இதை, கங்கண சூரிய கிரஹணம் என்கிறோம்.அதுபோன்ற கங்கண சூரிய கிரஹணம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணமாக இன்று நிகழ்கிறது. கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல் பகுதி, கிரீன்லாந்து மேற்கு பகுதி, கனடா ஆகிய பகுதிகளில், கங்கண சூரிய கிரஹணத்தை காண முடியும்.

பகுதி சூரிய கிரஹணமாக வட கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகள், ஆசியாவின் வட பகுதிகளில் பார்க்க முடியும்.இந்தியாவை பொறுத்தவரை, அருணாச்சல பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; பிற மாநிலங்களில் காண இயலாது.இந்த சூரிய கிரஹணம் இந்திய நேரப்படி மதியம் 1:42க்கு துவங்கி மாலை 6:41 மணிக்கு முடிகிறது. அதிகபட்ச கிரஹணம் 4:11 மணிக்கு நிகழும்..


SHARE

Related posts

Leave a Comment