இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயம்- உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

SHARE

மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடுக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயித்துள்ளது குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘நீட்’ தேர்வு அடிப்படையிலான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது.இதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக அந்த பிரிவினருக்கு 8 லட்ச ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடந்த விசாரணையின் போது பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாயை நிர்ணயித்துள்ள பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் நாகரத்னா விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது 8 லட்ச ரூபாய் வருமான உச்ச வரம்பு நிர்ணயித்தது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஆனால் எதை அடிப்படையாக வைத்து பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு வருமான உச்ச வரம்பாக 8 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

ஓ.பி.சி.யினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் வரம்பும் 8 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு சமூக மற்றும் கல்வி பின்னடைவுகள் இல்லாதபோது அவர்களுக்கும் அந்த பின்னடைவுகளை சந்திக்கும் ஓ.பி.சி. பிரிவினருக்கும் ஒரே வரம்பு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?

வருமான உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளதை மறு பரிசீலனை செய்யும் எண்ணம் உள்ளதா என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.


SHARE

Related posts

Leave a Comment