தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு ஜாமீன்

SHARE

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5-ந்தேதி கைப்பற்றினர். 
இந்த விவகாரத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை உள்பட 5 மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை ஒராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தங்கக்கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேசியபுலனாய்வு அமைப்பு சார்பில் பதியப்பட்டுள்ள உபா வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் ஸ்வப்னா சுரேஷ் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேசியபுலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்தார். 
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தங்கக்கடத்தல் வழக்கில் தேசியபுலனாய்வு அமைப்பு பதிவு செய்திருந்த உபா வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு கேரள ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேருக்கும் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. 


SHARE

Related posts

Leave a Comment