தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் அமர்வு நடைபெற்றது. இதில், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசின் செலவினங்கள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பதிலளித்தார்.
அதில், தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பு, சிகிச்சை, நிவாரணப் பணிகளுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.7,167.97 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.830.60 கோடியும், மருத்துவக் கட்டுமானப் பணிக்கு ரூ.147.10 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.