பாஜகவை வீழ்த்த புதிய திட்டம் – மாநில உரிமையை கையிலெடுக்கும் மம்தா.

SHARE

மேற்கு வங்கத்தில் அடுத்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் பா.ஜ.வின் தேசியவாதம் ஹிந்துத்துவா கோஷங்களை எதிர்கொள்ளும் வகையில் ‘பெங்கால் பெருமை’ என்ற ஆயுதத்தை கையில் எடுக்க ஆளும் திரிணமுல் காங். முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். அரசு அமைந்துள்ளது. சட்டசபையின் 294 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது.தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரின் உதவியை அவர் நாடியுள்ளார்.

கடந்த சில தேர்தல்களாக மேற்கு வங்கத்தில் பா.ஜ. பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்றது. இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில் புதிய கோஷத்தை கையில் எடுக்க திரிணமுல் திட்டமிட்டு ஆய்வுகளை நடத்தியது. அதன் முடிவில் பெங்காலி பெருமை என்ற கோஷத்தை முன்வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வியூகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜ.வின் தேசியவாதம் மற்றும் ஹிந்துத்துவா கொள்கைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாநில மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் ஹிந்துக்கள்; 30 சதவீதம் பேர் முஸ்லிம்கள். சிறுபான்மையினர் ஆதரவு கட்சி என்ற பெயர் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதை உடைத்து அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற வேண்டும்.

பா.ஜ. தேசியவாதம் என்று பேசுவதால் மாநிலத்தின் பெருமையை முன் வைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் தமிழ் தமிழினம் என்பதை முன்னிறுத்தியே அரசியல் செய்கின்றன. மஹாராஷ்டிராவில் சிவசேனாவும் மராத்தி பெருமையை முன்வைத்துள்ளது. அதனால் பெங்கால் பெருமையை முன் வைத்து பிரசாரம் செய்தால் யாரும் விமர்சிக்க முடியாது.

பெங்கால் பெருமை என்பது மொழி சார்ந்ததாக இருக்காது; மண் சார்ந்ததாக இருக்கும். மண்ணின் மைந்தர்களை முன்னிறுத்தி எங்கள் பிரசாரம் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


SHARE

Related posts

Leave a Comment