மும்பையில் டி.ஆர்.பி. மோசடியில் ஈடுபட்ட கும்பலை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக மராத்தி சேனல் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த மோசடியில் பிரபல ஆங்கில செய்தி சேனல் ரிபப்ளிக்கும் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கூறியிருந்தார்.
நிர்வாகிகளிடம் விசாரணை
இந்தநிலையில் டி.ஆர்.பி. மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் ரிபப்ளிக் சேனல் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கன்சாந்தினி மற்றும் 2 தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதில் நேற்று விகாஸ் கன்சாந்தினி, தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் பண்டாரி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் மும்பை போலீசார் டி.ஆர்.பி. மோசடி குறித்து விசாரணை நடத்தினர். இதேபோல ரிபப்ளிக் சேனல் மூத்த அதிகாரி ஞானஷியாம் சிங்கிடமும் விசாரணை நடத்தினர்.