அமெரிக்காவில் நவ.,03ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் இருவரும் ஒரே மேடையில் விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் அளித்த பேட்டியில், ‛தற்போதுதான் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளேன். முடிவுகள் எப்படி வருகிறது என நாம் பார்ப்போம்’ எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், இருவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைகளை உடனடியாக தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரம், கிளீவ்லேண்டில் நடந்த பிடன் உடனான விவாதம், மினசோட்டாவில் நடந்த பிரசார பேரணி ஆகியவற்றில் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் உடன் டிரம்ப் பயணித்தது குறிப்பிடத்தக்கது.