முதல் டோஸ் கோவிஷீல்டு, 2வது டோஸ் கோவாக்சின்; உயிரோடு விளையாடும் உ.பி.,அதிகாரிகள்

SHARE

உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் டோஸாக கோவிஷீல்டும், இரண்டாவது டோஸாக கோவாக்சினும் மாற்றி போட்டதால் சர்ச்சையானது.

உத்தரப்பிரதேச மாநிலம், சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2வது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு மே 14ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 20 பேர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு முதல் டோஸ் குறித்து எந்த விவரத்தையும் கேட்காமல் அனைவருக்கும் 2வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுள்ளனர். தடுப்பூசியை மாற்றி போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சித்தார்த்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறுகையில், ‛தடுப்பூசி மாற்றி போடப்பட்டது முழுக்க முழுக்க கவனக் குறைவுதான். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கு காரணமானவர்களிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்’ எனக் கூறினார்.

இது குறித்து தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் கூறுகையில், ‛தடுப்பூசி மாற்றி போட்டதில் இருந்து தான் மிகுந்த பயத்தில் இருப்பதாகவும், 2வது டோஸ் போடும் போது யாருமே எதையும் விசாரிக்கவில்லை,’ என்றார். தடுப்பூசிகளை மாற்றிப்போட்டது பெரும் சர்ச்சையே எற்படுத்தியுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment