இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 3,500-க்கு மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அங்கு ஊரடங்கு போட மறுத்து வந்த அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, கடைசியில் புத்த மத குருமார்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் தந்த அழுத்தத்துக்கு அடிபணிந்து ஆகஸ்டு 30-ந்தேதி வரையில் 10 நாட்களுக்கு ஊரடங்கு போட்டுள்ளார்.இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார்.
அmப்போது பேசிய கோத்தபய ,கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 30-ந்தேதி காலை 4 மணி வரையில் ஊரடங்கு போட சம்மதித்துள்ளேன். ஆனால் எதிர்காலத்தில் நீண்டதொரு ஊரடங்கு போடப்பட்டால், மக்கள் தியாகங்கள் செய்வதற்கு தயாராகும் தேவை ஏற்படும்.
இந்த இக்கட்டான தருணத்தில், கொரோனாவின் தீவிரத்தை அனைவரும் ஒப்புக்கொண்டு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும். மீள்வதற்காக போராடும் சுற்றுலாத்துறை மோசமாக பாதிக்கும்.கொரோனாவால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், தடுப்பூசி போட்டுக்ெகாள்ளாத, 60 வயது கடந்தவர்கள்தான்.நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த முயற்சியின் விளைவாக நாடு தற்போது அதிகளவிலான தடுப்பூசிகளைப் பெற்று வருகிறது.
உலகளவில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்கிற நாடுகளில் ஒன்று, இலங்கை.தற்போது 30 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 98 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 43 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.இந்த மாதம் 31-ந் தேதிக்குள் 81 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு விடும் என்றார்.