வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

SHARE

சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்விஎழுப்பியதுடன் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பி.சி., எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்.பி.சி., பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில் எம்.பி.சி., பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டம் அ.தி.மு.க., முதல்வராக பழனிசாமி இருந்தபோது சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க., அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.

இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், எம்.பி.சி., பிரிவில் இருந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் 25 மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முறையாக தரவுகள் இல்லாமல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டா, சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா, இதற்கெல்லாம் அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. ஆகவே, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவித்தனர்.

அதேபோல், தற்போது வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆகையால் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு வெளியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


SHARE

Related posts

Leave a Comment