அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது – முன்னாள் அமைச்சர் வேலுமணி

SHARE

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் 129 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி 1132 ஆவணங்களை ஆராய்ந்து தாக்கல் செய்த அறிக்கையில் வழக்குபதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் அரசும் வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது

ஆனால் ,ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்,அதில்

முகாந்திரம் இல்லை எனக்கூறி அரசால் கைவிட முடிவெடுக்கப்பட்ட வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனவும், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்

அந்த மனுவில், நாளிதழில் விளம்பரம் வெளியிடுவதில் தொடங்கி
மாநகராட்சி டெண்டர்கள் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு ஒளிவுமறைவற்ற முறையில் விதிகளுக்கு உட்பட்டு தான் வழங்கப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம்
தன்னுடைய அரசியல் விரோதிகளுக்கும், டெண்டர் கிடைக்காதவர்களுக்கும் நிழலாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும், தனது பெயரையும் தான் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்துள்ள வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையையும் சேர்த்தக் கொள்ள வேண்டுமென கோரியுள்ளார்

மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன விசாரணையை மீண்டும் துவங்க முடியாது எனவும், தற்போது தான் அமைச்சராக இல்லாத நிலையில் வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் அக்டோபர் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


SHARE

Related posts

Leave a Comment