கொரோனா வைரஸ் முதன் முதலில் மத்திய சீன நகரமான வுஹானில் 2019 டிசம்பரில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. சீனா இது பற்றிய ஆரம்ப தகவல்களை மறைக்க முயற்சித்தது. வைரஸின் உண்மையான வீரியம் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்துக்கும் தாமதமாகவே தகவல் தெரிவித்தது. அதற்குள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக மாறிப்போய் உலகையே ஊரடங்கிற்கு தள்ளியது. இதனால் ஏராளமான பொருளாதார மற்றும் உயிர் சேதங்கள் நிகழ்ந்தன.

ஆனால் வூஹானில் கொரோனா வைரஸ் தோன்றவில்லை என சீனா மறுத்து வருகிறது. இந்தியா, இத்தாலி, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என கதைகட்டி வருகிறது. இதற்கிடையே சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி விசாரிக்க வேண்டும் என உலகளவில் கோரிக்கை எழுந்தது. இந்த விசாரணை ஜனவரியில் நடக்கும் என உலக சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் ஹெடின் ஹால்டோர்சன் அறிவித்துள்ளார். சீனா செல்லும் சர்வதேச குழுவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் விலங்கு நல நிபுணர்களை இருப்பார்கள் என்றும் கூறினார்