வீட்டு வாடகை கேட்டுவந்த வீட்டு உரிமையாளர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டரை கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சுகுணாவல்லி (41). இவர் அருகே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் வசிப்பது ஒரு வாடகை வீடு
கடந்த நான்கு மாதமாக அவர் வசிக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாக வீட்டின் உரிமையாளர் ரகு வாடகை கேட்டு பலமுறை பெண் இன்ஸ்பெக்டரை நாடியுள்ளார். ஆனால் பெண் இன்ஸ்பெக்டர் வாடகை கொடுக்காமல் ரகுவை ஏமாற்றி வந்துள்ளார்.
மேலும் தான் போலீஸ் என்று கூறி மிரட்டியும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் வாடகை கேட்பதற்கு ரகு, பெண் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குச் சென்றதால் கோபமடைந்த பெண் இன்ஸ்பெக்டர் வீட்டு உரிமையாளர் மீது, என்னை கற்பழிக்க முயன்றார் எனக்கூறி பணியன்கரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து போலீசார், வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இது தவிர ரகுவின் மருமகன் பெண் இன்ஸ்பெக்டரிடம் வாடகை கேட்பதற்காக வந்துள்ளார். அவர் மீதும் பாலியல் தொல்லை செய்ததாக அதே போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார்.
இது குறித்த தகவல் போலீஸ் கமிஷனர், கோழிக்கோடு உதவி கமிஷனரை அழைத்து வழக்கை விசாரிக்க உத்தரவிட்டார். பெண் இன்ஸ்பெக்டர் சுகுணாவல்லி கொடுத்த புகாரை தீவிரமாக விசாரணை நடத்துங்கள் என கேட்டுக்கொண்டார். அதன்பேரில் உதவி கமிஷனர் நடத்திய விசாரணையில் வாடகை கேட்டு நச்சரித்தார் என்ற கோபத்தில் ரகு மீதும் ரகுவின் மருமகன் மீதும் பெண் இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்த முழு விசாரணையில் சுகுணாவல்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையொட்டி போலீஸ் கமிஷனர் சுகன வல்லியை தற்காலிக வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டு அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தார்.